பென்னாகரத்தில் இடைத் தேர்தல் தேவை இல்லை
Posted On Thursday, March 25, 2010 at at 8:44 PM by Muthuஅவிநாசி : ''ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார செல்வாக்கு காரணமாக பென்னாகரத்தில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை; வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே ஒப்புக்கொண்டுள்ளதால், தாராளமாக தேர்தலை நிறுத்தி விடலாம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூருக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பென்னாகரம் இடைத்தேர்தல் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. திருமங்கலம் 'பார்முலாவை' தி.மு.க., அமல்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை தொகுதிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற புகாரும் வரத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். ஆளுங்கட்சியினர், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் ஆகியவற்றை தொடர்ந்து விரிவுபடுத்தி செல்கின்றனர். நேற்று முன்தினம் வரை பென்னாகரம் வாக்காளரின் சந்தை மதிப்பு (3,000 ரூபாய்). வாக்காளர்களின் உரிமை, மிக கேவலமாக விலை பேசப்படுகிறது.
'வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை' என்று தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தையும் மீறி தவறுகள் நடக்கின்றன. தவறு நடப்பது தெரிந்தும் கூட, 'தேர்தலை நடத்த வேண்டுமா' என்பதை ஆணையம் யோசிக்க வேண்டும். பா.ஜ.,வை பொறுத்தவரை, தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியவில்லை என்றால், அதை ரத்து செய்வதில் தவறு ஏதுமில்லை என்றே கருதுகிறோம். அடுத்த மாதம் 10, 11 தேதிகளில் பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி சென்னை வருகிறார். கொடியேற்று விழா, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இரு தினங்களிலும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகளை சந்திக்கிறார். இவ்வாறு, பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மாநில பொது செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், திருப்பூர் மாவட்ட தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.