வினாத்தாள் வினியோகத்தில் வேறு குளறுபடி - ஜெயலலிதா

சென்னை: புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்யுமாறு வைக்குமாறு பென்னாகரம் தொகுதி வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, பகலில் ஆறு மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மட்டுமே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டதும் அளிக்கப்படவில்லை என்பது தான் சோதனையிலும் வேதனை!.

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மின் வெட்டு காரணமாக பயிர்களுக்கு போதுமான நீரைப்பாய்ச்ச முடியாமல், பயிர் வாடிப்போய் விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எந்தவித முன்னறிவிப்புமின்றி மின்தடை மற்றும் மின்னழுத்த குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

இதன் விளைவாக, இந்த மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. கடுமையான மின்வெட்டு காரணமாக நாட்டின் தொழில் உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இரவு நேரங்களில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. தேர்விற்கு முந்தைய நாள், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்படுவதால், மாணவ-மாணவியர் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆனால், அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ மின்வெட்டு இல்லை என்கிறார்.

இந்தச் சோதனை போதாது என்று, மறுநாள் நடந்த தேர்வில் வினாத்தாள் வினியோகத்தில் வேறு குளறுபடி!

பெட்ரோல்-டீசல் விலை...

அடுத்தபடியாக, மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்ட போது, அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி இருப்பதாக கூறினார் கருணாநிதி. ஆனால், சென்னை உட்பட 13 பெருநகரங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு மேலும் 41 பைசாவும், டீசலின் விலை லிட்டருக்கு மேலும் 26 பைசாவும் உயர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் விலைவாசி மேலும் உயரக்கூடும். இது குறித்து கருணாநிதி இதுவரை வாய் திறக்கவில்லை.

போலி மருந்துகள்..

அரசின் வன்முறைக்கு ஆதரவான போக்கு காரணமாக, தமிழ் நாட்டில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலாவதியான மருந்து, மாத்திரைகளில் உள்ள தேதி பற்றிய தகவல்களை மாற்றி அதை மீண்டும் விற்பனை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் காவல் துறையும், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் வலுவற்ற துறைகளாக விளங்குகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

பாலைவனமான பென்னாகரம்:

கடந்த நான்கு ஆண்டு காலமாக பென்னாகரம் தொகுதிக்காக எதையும் செய்யாததால் தான், இந்தத் தொகுதி வறட்சியாகவும், குடிநீரற்றும், பாலைவனமாகவும், தொழில் வளர்ச்சி இன்றியும் காட்சி அளிக்கிறது.

இந்தச் சோதனைகள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கருணாநிதி கேட்கிறார் போலும்! இந்த நிலைமை தொடராமல் இருக்க, உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய, உங்கள் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய வேட்பாளரான ஆர். அன்பழகனுக்கு புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை அமோக வெற்றி பெறச்செய்ய வைக்குமாறு பென்னாகரம் தொகுதி வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Posted in Labels: , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...