தமிழில் பெயர் பலகைகள் - இன்று கடைசி நாள்

சென்னை: தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். மேயர் மா.சுப்ரமணியனே நேரடியாக களம் இறங்கி பெயர்ப் பலகைகளை அகற்றினார்.

தமிழிலிலேய வர்த்தக நிறுவனங்கள், சிறு வணிக நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பான பெயர்ப் பரிந்துரைப் பட்டியலையும் அது வியாபாரிகளுக்கு கொடுத்திருந்தது.

நேற்று வரை பெயர்ப் பலகைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர். மேயர் மா.சுப்ரமணியனே இதில் நேரடியாக ஈடுபட்டார்.

அண்ணா சாலையில்அதிகாரிகளுடன் வந்தஅவர் தமிழில் வைக்கப்படாத பெயர்ப பலகைகளை அகற்ற உத்தரவிட்டார்.

தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் மேயர் அறிவித்துள்ளார்.

Posted in Labels: | 0 comments

செம்மொழி மாநாடு-கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலைப் புலிகள் பெயரில் இமெயில்

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தின் பெயரில் இ மெயில் மூலம் வாழ்த்து அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நன்றியும், மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளார்.

இராமு.சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் என்ற பெயரில் தமிழக அரசுக்கு அந்த இமெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைவர், துணைத் தலைவர்கள், தலைமைக் குழு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு என்ற முகவரியிடப்பட்டு 5 பக்கங்களைக் கொண்ட மெயிலாக அது உள்ளது.

அதில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப்பார்க்க விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இனத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்பதால், அதனை வரவேற்கிறோம். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி-அந்த வாழ்த்தினூடே ஈழத்தமிழ் இனம் படுகின்ற இன்னல்களைச் சுட்டிக்காட்டி-அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு-இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.

தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழி கோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டன குரல்கள் எழுந்தபோது, "அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல'' என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.

இந்த நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கி விடாது. ஒரு காலத்தில் உதறிக்கொண்டு எழுந்து பேசத்தான் போகிறது.

இதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து- ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் போது, "இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு'' என்று அறிக்கை வெளியிட்டு-"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்-எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்'' என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Labels: , | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...