பத்தாம் வகுப்பு, பத்து லட்சம் பேர்

சென்னை : பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (23ம் தேதி) துவங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு வகையான தேர்வுகளை 10 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

கடந்த முதல் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், நாளையுடன் (22ம் தேதி) முடிகின்றன. நாளை, வணிகவியல், 'ஹோம் சயின்ஸ்' மற்றும் புவியியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள், ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து நடக்கின்றன. இதன் முடிவுகள், மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும். பிளஸ் 2 தேர்வுகள் முடிவதைஅடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை மறுதினம் முதல் நடைபெறுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி., உள்ளிட்ட நான்கு போர்டு மாணவர்களுக்கும் ஒரே தேதியில் தேர்வு ஆரம்பிக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி: இந்த தேர்வை, 6,493 பள்ளிகளில் இருந்து, எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 966 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில், நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 523 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 443 பேர் மாணவியர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 14 ஆயிரத்து 616 பேர் எழுதுகின்றனர். தமிழ் வழியில் மட்டும், ஏழு லட்சத்து 66 ஆயிரத்து 328 பேர் தேர்வெழுதுகின்றனர். மீதமுள்ள மாணவர்கள், ஆங்கில வழியில் எழுதுகின்றனர்.

மெட்ரிக்: இந்த தேர்வை, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 20 பேர் எழுதுகின்றனர். இவர்களில், 71 ஆயிரத்து 764 பேர் மாணவர்கள்; 58 ஆயிரத்து 256 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,492 மாணவர்களும் (கடந்த ஆண்டை விட 205 பேர் குறைவு), ஓரியன்டல் தேர்வை 1,593 மாணவர்களும் எழுதுகின்றனர். புதுச்சேரியில், எல்லா தேர்வர் களும் சேர்த்து 15 ஆயிரத்து 391 பேர் எழுதுகின்றனர். நான்கு போர்டு தேர்வுகளும், 2,791 மையங்களில் நடக்கின்றன. 'ரெகுலர்' மாணவர்கள் மட்டுமின்றி, தனித்தேர்வு மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும், நாளை மறுதினம் முதல் தேர்வு துவங்கினாலும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓரியன்டல் மாணவர் களுக்கு மட்டும், ஏப்ரல் 7ம் தேதியுடன் தேர்வு முடிகிறது. மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் மாணவர் களுக்கு, ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வைப் போலவே, இந்த தேர்வுகளுக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது. இதன் முடிவுகள், மே மாதம் 20ம் தேதிக்குப் பின் வெளியாகும்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...