தமிழுக்கு வயது 20000

கோவை: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி தமிழ் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நேற்று செம்மொழித் தகுதி என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்கப்படும் தொடைகள் 8,556. இந்த தொடை வகைகளில் கூறப்படும் தமிழ் மொழியின் காலம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று தொல்காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்றால், மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்க வேண்டும் என்றே கருதத் தோன்றுகிறது என்றார்.

Posted in Labels: | 0 comments

இந்திய கல்வெட்டுகளில் 60% தமிழே

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை.

ஐந்திணை நில வகை பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்:

இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காத்தலுக்கும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை (bio diversity) ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசின் சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.

இலங்கை விவகாரம்:

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

தமிழை முதலில் ஆட்சி மொழியாக்க வேண்டும்:

மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்திய கல்வெட்டுகளில் 60% தமிழே:

நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு பூங்குன்றனார் விருது:

தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.

தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

Posted in Labels: | 0 comments

மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்

கோவை: உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும். இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும்.

இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.

மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...