தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது-வைகோ
Posted On Tuesday, March 2, 2010 at at 4:46 PM by Muthuசெங்கோட்டை: தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செங்கோட்டையில் கட்சிக் கொடியேற்றி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் ஜனாநாயகம் செத்து போய்விட்டது. பண நாயகம் செழித்தோங்கி உள்ளது. ஓட்டுக்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் கொடுக்கிறார்கள். 50 கோடி கொடுத்து பதவிக்கு வந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள், கொள்கைக்காக போட்டியிடுவதில் வெற்றி, தோல்வி சகஜம்.
தமிழகத்தில் வன்முறை வந்து விடக்கூடாது. கேரளா, ஆந்திரா, சட்டீஸ்கரில் பேராபத்து வந்து விட்டது. அரசு மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் பேராபத்து வந்து விடும்.
வடக்கே இருக்கும் விபரீதம் இங்கு வந்து விடக்கூடாது. லட்சம் பேர் தேவையில்லை. ஆயிரம் பேர் போதும். வன்முறைக்கு மதிமுக ஒரு போதும் துணை போகாது. 16 ஆண்டுகால வரலாற்றில் மதிமுக ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது.
கேரள அரசை கண்டித்து மே 28ம் தேதி 13 இடங்களில் சாலைகளில், கேராளவிற்கு கொண்டு செல்லும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மதிமுக மறிக்கும்.
குமரி மாவட்டம் நெய்யாற்றிலும் தண்ணீர் தர மறுப்பதால் அங்கு 28 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. கரூர் மாவட்டத்தில் பாம்பாறு தண்ணீர் வராததால் 80 ஆயிரம் ஏக்கர் விலைநிலங்கள் தரிசாக உள்ளன.
கேரளா உதவியின்றி தமிழகம் வாழ முடியும். ஆனால் கேரள மக்கள் தமிழகத்தை நம்பிதான் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே தண்ணீர் தர மறுப்பது நியாயமற்ற செயல்.
தமிழக மக்கள் நலனுக்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
பொன்னாடை போர்த்திய காங். தலைவர்
இந்தக் கூட்டத்தின்போது செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிலிங்கம் வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.