உலக கோப்பை ஹாக்கி, பாகிஸ்தானை விழ்திய இந்தியா



புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.



டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.



பலத்த பாதுகாப்பு:பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து, போட்டி நடக்கும் தயான்சந்த் தேசிய மைதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.



அதிரடி துவக்கம்: "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே நிலைகுலைந்து போனது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சிவேந்திர சிங் கோலாக மாற்ற, அரங்கில் குவிந்திருந்த இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் 35வது நிமிடத்தில் அம்பயர் மறுபரிசீலனை முறையில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியா பெற்றது. இதில் சந்தீப் சிங் ஒரு சூப்பர் கோல் அடிக்க, இந்திய அணி முதல் பாதி முடிவில் 2-0 என்ற முன்னிலை பெற்றது.



கோல் மழை:இரண்டாவது பாதி துவங்கியதும் பிரப்ஜோத் சிங்(37வது நிமிடம்) அசத்தல் கோல் அடித்தார். இதற்கு பின் போராடிய பாகிஸ்தான் மூன்று "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் இரண்டாவது கோல் அடிக்க, இந்தியா 4-0 என்ற அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. பின் 60வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் பாகிஸ்தானின் சோகைல் ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றது.



பழி தீர்த்தது இந்திய அணி : கடந்த டிசம்பரில் அர்ஜென்டினாவில் நடந்த சாம்பியன்ஸ் சாலன்ஞ் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதற்கு இம்முறை நேற்று நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பழி தீர்த்துக்கொண்டது. தவிர, கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இருந்த இந்திய அணி, நான்காவது மோதலில் பாகிஸ்தானை வெற்றி கண்டது.



ரூ. 1 லட்சம் பரிசு : உலக கோப்பை ஹாக்கி தொடர் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பரிசு மழை குவிகிறது. பயிற்சியாளர் உள்ளிட்ட அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும், தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்குவதாக, ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.



நாணயத்துக்கு மறுப்பு : பாதுகாப்பு கெடுபிடிகள் "ஓவராக' இருக்க, பத்திரிகையாளர்கள் பரிதவித்து போயினர். இவர்கள், மைதானத்துக்குள் நாணயங்களை கூட எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சிகரெட், தீப்பெட்டி போன்ற பெருட்களுடன் நாணயங்களையும் நுழைவாயிலில் விட்டுச் சென்றனர். பின் "போட்டோகிராபர்கள்' அமர்வதற்கு சேர் மற்றும் மின் வசதி செய்து தரப்படவில்லை. மைதானத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை கடந்து நிற்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் "போட்டோ' எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.



இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""நாணயங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை, யார் வேண்டுமானாலும் மைதானத்தில் தூக்கி எறியலாம். இதனால் வீரர்களுக்கு காயம் அடையலாம். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது,''என்றார்.



"வீடியோ அம்பயர்' அறிமுகம் : உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை(வீடியோ அம்பயர்) நேற்று அறிமுகமானது. இதன்படி அம்பயர் தீர்ப்பை எதிர்த்து இரு அணிகளும் தலா ஒருமுறை அப்பீல் செய்யலாம். இது வீரர்களுக்கு சாதகமாக அமைந்தால், மீண்டும் அப்பீல் செய்யலாம்.நேற்றைய தென் ஆப்ரிக்க, ஸ்பெயின் மோதிய போட்டியின் 44வது நிமிடத்தில், தென் ஆப்ரிக்க வீரர்கள் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கோரினர். இதனை மலேசிய அம்பயர் அமர்ஜித் சிங் நிராகரித்தார். உடனே தென் ஆப்ரிக்கா சார்பில் "அப்பீல்' செய்யப்பட்டது. "ரீப்ளே' பார்த்த "வீடியோ அம்பயர்' ஜாம்சன் ஹமிஷ், "அப்பீலை' ஏற்றுக் கொண்டார். முதல் அப்பீல் சாதகமாக அமைந்ததால், தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரிகோ கார்சா அடித்த கோல் தவறானது என அப்பீல் செய்தது. பந்து உயரமாக சென்றதாக புகார் கூறியது. இதனை வீடியோ அம்பயர் நிராகரித்தார்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...