மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் - பழ.நெடுமாறன்
Posted On Monday, April 12, 2010 at at 8:41 PM by Muthuநெய்வேலி: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதால் வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின் வினியோகத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.
நெய்வேலியில் நேற்று நிருபர்களை சந்தித்தபோது பழ.நெடுமாறன் கூறியதாவது:
தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி உற்பத்தி நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 80 சதவீதம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த பட வேண்டும்.
அண்மையில் கர்நாடக அரசு உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை விதித்துள்ளது.
இதனை தமிழக அரசு பின்பற்றி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டும்' என்றார்.