நமது சின்னம் புலிச்சின்னம்

சென்னை: இயக்குநர் சீமான் விரைவில் அறிவிக்கவிருக்கும் தனது புதிய கட்சியின் சின்னமாக பாயும் புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் சிவப்பு நிற பின்னணியில் பாயும் புலி இருப்பது போல கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி திலகர் திடலில் சமீபத்தில் இந்தக் கொடியை அறிமுகம் செய்யும் விழாவில் சீமான் பேசுகையில்,

வரும் மே 18 ஆம் நாள் மதுரையை நோக்கி மிகப்பெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் போரட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் நசுக்கப்பட்ட இந்த நாள் தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம்.

இந்த நாளை எமது புதிய கட்சி துக்க தினமாகக் கடைப் பிடிக்கும். நாம் தமிழர் கட்சி ஒரு மாற்றுக் கருத்துள்ள அரசியல் கட்சியாகத் திகழும். நாம் இன மற்றும் மத வேற்றுமைகளை கடந்தவர்கள்.

எமது கட்சியில் உள்ள தலைவர்கள் பொன்னாடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, அதற்கு பதில் நாம் புத்தகங்களையே ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் என்பது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்குரிய நாடு மட்டுமல்ல. அது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் தாயகமாகவே அமையும்.

இலங்கை அரசு போர்க் குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அயர்லாந்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை தமிழக சட்டசபை பரிந்துரை செய்ய மறுத்துள்ளது.

18 மில்லியன் சிங்கள மக்கள் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் ஆனால் நாம் 75 மில்லியன் மக்கள் இங்கு செயலற்றுக் கிடக்கிறோம்.

இப்படி இருக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாத அளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள 15 மில்லியன் சீக்கியர்கள் தமது உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அதனை பெறவில்லை.

ஏன்? சீக்கியர்கள் சீக்கியர்களாகவே உள்ளனர் ஆனால் தமிழர்கள் தமிழர்களாக இல்லை.

தமிழகத்தை தமிழர்கள் ஆட்சி செய்ய வேண்டும். புலிச் சின்னம் சோழர்களில் சின்னம். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சின்னமும் அதுவே. எனவே தான் நாம் அதனை வரித்துக் கொண்டுள்ளோம்.

தமிழ் மக்களை காப்பாற்ற வானத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். திரைப்படங்களிலிருந்தும் யாரும் வரப்போவதில்லை. நீங்கள்தான் உங்களின் உரிமைக்காக போராட வேண்டும். உங்கள் விடுதலை உங்களின் கையில் மட்டுமே உள்ளது.

போரிடாமல் இந்தியா உங்களுக்கு சுதந்திரத்தை தரப் போவதில்லை. அமெரிக்கா வந்து உங்களை விடுவிக்காது. சீனாவும், ஜப்பானும் உங்களுக்கு உதவாது. சிங்கள மக்கள் உங்களுக்கு எதனையும் இலகுவாகத் தரப்போவதில்லை.

தமிழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் ஆதரவின்றி தமிழீழம் உருவாகாது, ஆனால் தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இந்தியா உதவிக்கு வராது. சீமானோ, வைகோவோ, நெடுமாறனோ அல்லது திருமாவளவனோ ஆதரவுகளை தருவதால் மட்டும் தமிழீழம் உருவாகாது.

தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவுகளை வழங்க வேண்டும். அந்த கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால்தான் அது சாத்தியமாகும். ஆனால் அவர்கள் அதனை செய்யப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.

அதற்க்கு நாம் என்ன வேண்டும்?

தமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை நெருக்குதலுக்குள்ளாக்கும் துணிவு மிக்க கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும். அது தான் ஒரே வழி.

தமிழகத்தை தமிழ் மக்கள் 2016 ஆம் ஆண்டு ஆட்சி புரிவார்கள். அதுவரை நாம் அடிமைகளாக வாழ்வோம். நாம் இந்தியாவின் இறைமைக்கு பாதகமானவர்கள் அல்ல. ஆனால் தமிழகத்தை தமிழ் மக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

Posted in Labels: , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...