நித்யானந்தா கைது
Posted On Wednesday, April 21, 2010 at at 2:45 PM by Twilight Senseபெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார்.
அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர்.
அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர்.
நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார்.
தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார்.
அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.
சமீபத்தில் தனது ஆசிரம தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.
மீண்டும் ரெய்ட்:
இந் நிலையில் நித்யானந்தாவின் ஆஸிரமத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் நேற்று மீண்டும் திடீர் சோதனை நடத்தினர்.
ஆஸிரம ஆவணங்களை பார்வையிட்ட அவர்கள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பல மணி நேரம் சோதனையும் நடத்தினர்.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.