விரைவில் தடையற்ற மின்சாரம் - கலைஞர்

சென்னை : தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையால், பொதுமக்கள் புழுங்குகின்றனர். தடையற்ற மின்சாரம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள் நிலையில், 'தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலை சீரடைய, இன்னும் சில மாதங்கள் ஆகும். சென்னையில் மின்தடை இல்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை
:

மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியின் அளவு அதற்கு சமமாக இருக்கவில்லை. நினைத்த நேரத்தில் மின் உற்பத்தியை துவங்கிவிட முடியாது. கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான முயற்சியை துவங்கியிருப்பார்களேயானால், தற்போது மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைத்திருக்கும். இந்த உண்மையை உணர்ந்து தான் தி.மு.க., அரசு கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பின், மின் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால், அதன் பயன் கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும். அப்போது நம் பற்றாக்குறை பிரச்னை தீரும். அத்தகைய தன்னிறைவு ஏற்படும் வரை, இப்போதுள்ள பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு எந்த வகையில் எல்லாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறுதொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்வினியோகம் செய்யப்படுகிறது. மின்வெட்டு என்பது இந்தப் பகுதிகளில் இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளுக்கு பகல் நேரத்தில் மட்டும் சுழற்சி முறையில் மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மின்தேவை 10 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரத்து 800 மெகாவாட். மின்சார வாரியம் மூலம் 9,800 மெகாவாட் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரத் தேவையைச் சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மே மாத இறுதியில், காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படும்போது மின்வினியோகம் சீரடையும். எந்த அளவிற்கு இதை சமாளிக்க முடியுமோ, அந்த அளவிற்கு சமாளிக்க தமிழக அரசு தன்னால் முடிந்த வரை, அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களும் இந்த நிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Labels: , , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...