திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் - உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல என்று நடிகை குஷ்பு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம் .

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான செக்ஸ் உறவு கொள்வது தவறு இல்லை என்று, நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை" என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம்:
"திருமணத்துக்கு பிறகே 'செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் குற்றமாகாது!

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

குஷ்பு கூறியது அவதூறு இல்லை

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

Posted in Labels: , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...