சுப்ரீம் கோர்ட் குழு தேவையற்றது - தமிழக அரசு மனு
Posted On Wednesday, March 10, 2010 at at 9:32 AM by Muthuடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது கடமையைத் தட்டிக் கழித்துள்ளது. இதுதொடர்பாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது தேவையற்றது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லுமா? முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதா? என்பன உள்பட பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால் இதில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக சமீபத்தில் தீர்மானம் போட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை நிரூபிக்கும் வகையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,
முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. புதிய அணை கட்டத் தேவையில்லை. பழுது பார்த்தால் போதும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும், அவற்றுக்கு தேவையான ஏராளமான ஆதாரங்களையும் தமிழக அரசு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி உள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்துள்ள இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். ஆனால் சுப்ரீம் கோர்ட் தனது கடமையை தட்டி கழித்து விட்டு, புதிய நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான பொறுப்பையும், அதிகாரத்தையும் சுப்ரீம் கோர்ட் தனி குழுவிடம் ஒப்படைத்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய மீண்டும் ஒரு குழு தேவை இல்லை.
ஆகவே சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு தேவையற்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த குழுவை சுப்ரீம் கோர்ட் வாபஸ் பெற்று, வழக்கை சுப்ரீம் கோர்ட்டே தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.