இந்தியாவின் ரகசியங்களை திருடிய சீனா
Posted On Wednesday, April 7, 2010 at at 9:55 AM by Twilight Senseஇந்திய ராணுவம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இருந்து ரகசிய ஆவணங்களை கம்ப்யுட்டர் மூலமாக சீன உளவாளிகள் திருடியுள்ளனர்.
`நிழல் மேகங்கள்' என்ற பெயரில் டொராண்டோவை மையமாக கொண்ட கனடா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் உளவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் உள்ள வர்த்தகம், கல்வி மற்றும் பிற கம்ப்யுட்டர் நெட்வொர்க் முறையை திருடுவதற்காகவே சீனாவில் ஏராளமான சர்வர்கள் நிறுவப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய தூதரகங்கள்
இந்தியாவில் உள்ள தனியார் தகவல்கள் மட்டுமின்றி, இந்திய அரசு தொடர்புடைய தகவல்களையும் சீன உளவாளிகள் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, சைப்ரஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் ரகசிய கம்ப்யுட்டர் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.
மேலும், சீனாவுக்கு வெளியே இருந்தபடியும் இத்தகைய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். குடிமக்களின் தனிப்பட்ட, வர்த்தக, நிதி மற்றும் பல்வேறு தகவல்களும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு திருடப்படும் ஆவணங்களை `ரகசியமானது', `தடை செய்யப்பட்டது', `நம்பிக்கைக்குரியது' என தரம் பிரித்து வைத்துள்ளனர்.
தரையில் இருந்து விமானத்தை தகர்க்கும் ஏவுகணையான `பெச்சோரா ஏவுகணை திட்டம்', அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மொபைல் ஏவுகணை பற்றிய தகவல்கள், பீரங்கி தொடர்பான `சக்தி திட்டம்' போன்ற இந்திய ராணுவத்தின் அதி முக்கிய ரகசிய தகவல்களும் சீன உளவாளிகளின் கம்ப்யுட்டரில் பதிவாகி இருக்கிறது.
திபெத் மத தலைவர் தலாய்லாமா அலுவலகத்தில் இருந்தும் ஏராளமான ரகசிய ஆவணங்களை அந்த உளவாளிகள் திருடி இருக்கின்றனர். தலாய்லாமா அலுவலகத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலும் ஆயிரத்து ஐநூறு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருப்பதையும் அதன் விவரங்களையும் சீன உளவாளிகளின் கம்ப்யுட்டர் தெரிவிக்கிறது.