இப்போதும் இந்தியாவை நம்புகிறோம்

சென்னை: தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனையை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.


எழுகதிர்,தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா? என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார்.

லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில்,
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.

இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.

26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.

இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும், ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும்.

தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.

Posted in Labels: |

1 comments:

  1. Anonymous Says:

    இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...