தஞ்சையில் பசுமை பயணம்.

தஞ்சாவூர், ஜூலை 22: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கையொட்டி, தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) 6,000 பேர் பங்கேற்கும் பசுமைப் பயணம் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் நகரில் 5,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
...பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை "வளர்ந்து வரும் பசுமை தொழில்நுட்பம்' என்னும் தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தொடக்கிவைத்து உரை நிகழ்த்துகிறார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
இந்தக் கருத்தரங்கையொட்டி, மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெரியார் மணியம்மை பல்கலை. மற்றும் கவின்மிகு தஞ்சை அமைப்பின் சார்பில், ஜூலை 24-ம் தேதி 6,000 பேர் பங்கேற்கும் பசுமைப் பேரணி நடத்தவும், தஞ்சை நகரில் 5,000 மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டது.
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் காந்தி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார், முன்னாள் அரசு வழக்குரைஞர் நமச்சிவாயம், சில்வர்கிரீன் அக்ரோ புராடக்ட் நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம், உயிரி ஆய்வு மையத் தலைவர் பழனியப்பன், எக்ஸ்னோரா தலைவர் கே. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சை திலகர் திடலிலிருந்து பசுமைப் பேரணி தொடங்கி, முக்கிய தெருக்கள் வழியாக காலை 9 மணிக்கு அரசு ஐடிஐ திடலில் நிறைவு செய்யவும், இந்தப் பேரணியில் பங்கேற்பவர்கள் இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராகவும், மழை நீரை சேமிக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிக் கொண்டும், எழுதப்பட்ட பதாகைகளை எடுத்துச் செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பேரணியில் பங்கேற்றவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி, மாவட்ட வன அலுவலக வளாகம், விமானப் படை வளாகம் ஆகியவற்றுக்குச் சென்று 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளனர்.
நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து தண்ணீர்விட்டு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தஞ்சை லயன்ஸ் சங்கங்கள் சார்பில், 3,000 மரக்கன்றுகளும், சிவசிதம்பரம் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் 2,000 மக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: http://www.facebook.com/groups/thanjavur.nativies?ap=1

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...