மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்

கோவை: உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும். இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும்.

இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.

மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...