kurunji | குறுஞ்சி.

குறிஞ்சி என்றதும் மலையும் மலை சார்ந்த இடமும் என்று பாடப் புத்தகத்தின் இரண்டு மதிப்பெண் பதில் ஒன்று நினைவுக்கு வரும். மெத்த சரி. ஆனால் ஒரு மாவட்டத்துக்கே நீலகிரி என்று பெயர்



ஏற்பட இந்த குறிஞ்சி மலர்கள்தான் காரணம். நீல நிறத்தில்

பூக்கும் இந்தப் பூக்கள் அவ்வளவு வசீகரமானவை அல்ல.

நறுமணம் மிக்கவையும்கூட இல்லை. ஆனால் பூத்தால் ஒரு மலையையே நீல வண்ணமாகத் தோன்றச் செய்யும் அளவுக்குப்

பிரம்மாண்டமாகப் பூப்பவை. அதுதான் குறிஞ்சிப் பூவின் சிறப்பு.

இலக்கியத்தில் 5 வகை நிலங்கள் இருப்பதாக படிக்கிறோம். அவற்றில் முதன்மையானது குறிஞ்சி நிலம். இந்நிலம் முதன்மையானது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்புகளையும் கொண்டுள்ளது.

இந்நிலத்தைக் குறித்த பெருமைகளை ஆரிய அரசனான பிரகதத்தனுக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் கபிலர் குறிஞ்சிப்பாட்டையே பாடினார் என்பது வரலாறு. நவீன தொழில் நுட்ப அறிவியல் வளர்வதற்கு முன்னரே இம்மண்ணில் மலரும், மலர்களைக் குறித்த பரந்த அறிவும் தமிழர்களுக்கு இருந்துள்ளது.

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் பரவியுள்ள குறிஞ்சிப் பூக்கள் தமிழர்களின் நிலமான குறிஞ்சி நிலத்தின் அருங்கொடையாக அமைந்தது எனப் புலவர்கள் பலர் பாராட்டுகின்றனர். சோலைக்காடுகளில் படர்ந்துள்ள குறிஞ்சி செடிகளில் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சியளிப்பதாக கவிஞர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்கின்றனர்.

‘‘12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மலரான குறிஞ்சியைக் குறித்து இளங்கோவடிகளும் வேட்டுவ வரியில் பாடியுள்ளார். மதுரையை எரித்த பின்னர் கண்ணகி மலைப்பாங்கான பகுதிக்குச் செல்லும்போது, கோவலன் புஷ்பக விமானத்தில் தேவலோகம் சென்றதை குறிஞ்சி மலர்கள் பூத்திருந்த மலைப் பகுதியிலிருந்து கண்ணகி பார்த்ததாக இலக்கியம் கூறுகிறது. இதைத்தவிர சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என அனைத்து இலக்கியங்களிலும் குறிஞ்சிக்கு தனி இடமுண்டு'' என உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் வி.ஆத்மஜோதி தெரிவிக்கிறார்.

‘‘உலகில் 250 வகைகளிலான குறிஞ்சி வகைகள் உள்ளன. இவற்றில் 59 வகையினங்கள் தென்னிந்தியாவிலுள்ளன. மலை மாவட்டமான நீலகிரியில் மட்டும் 31 வகைகள் உள்ளன. இதுவரை ஸ்டிரொபிலான்தஸ் என்ற தாவர குடும்பத்தின் வகையிலிருந்த குறிஞ்சி செடிகளின் தாவர இனம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டிரொபிலான்தஸ் என்ற இனத்திலிருந்த பிளபோபில்லம் குந்தியானஸ் என்ற இனத்துக்கு மாற்றப்பட்டு விட்டது'' என உதகை தோட்டக்கலை தாவரவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராம்சுந்தர் தெரிவிக்கிறார். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் பிளேகாலஸ் செசிலிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை எனவும் அவர் தெரிவித்தார்.

குறிஞ்சி மலர்கள் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் என்பது யாவரும் அறிந்ததாகும். ஆனால், எல்லா பூக்களும் அப்படியல்ல. சிலவகை செடிகளில் ஆண்டுக்கு ஒரு முறையாவது பூக்கும் தன்மை கொண்டவையாகும். இது பருவநிலை மாறுபாடோ அல்லது உலக வெப்பமயமாதலின் விளைவுகளோ அல்ல. இயற்கையிலேயே குறிஞ்சி மலர்களில் உள்ள பல்வேறு ரகங்களில் வித்தியாசமான காலக்கணக்கில் பூப்பவையாகும். இமயமலைப் பகுதிகளில் கிழக்குப் பகுதிகளில் ஆண்டுக்கொரு முறையும், மேற்குப் பகுதிகளில் குறித்த கால இடைவெளிகளில் மட்டுமே குறிஞ்சிப் பூக்கள் காணப்படும். இதற்கிடையே இவை ஏன் 12 வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கிறது என்பதைக் குறித்த ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று

வருகின்றன.

ஆதிவாசி இன மக்களில் தங்களது வயதைக் கணக்கிட அவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை குறிஞ்சி மலர் பூத்துள்ளதை பார்த்துள்ளார் என்பதை அடிப்படையாக வைத்தே அவர்களது வயது கணக்கிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

‘‘தமிழனின் நாகரிகமே மலர்களில் தோன்றி மலர்களில் முடிவடைவதாகும். பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழர்கள் தங்கள் நாகரிகத்தின் சின்னமாக மலர்களையே பயன்படுத்துகின்றனர்.

அதைத்தவிர பெண்களும் மலர்களுக்கு இணையாகவே ஒப்பிடப்படுகின்றனர். அதனால் பழந்தமிழர் வாழ்வில் மட்டுமின்றி இக்காலத் தமிழர் வாழ்வும் மலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதில் குறிஞ்சி மலர்களுக்கான முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது'' எனத் தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரகாசம் குறிப்பிடுகிறார்.

இத்தகைய குறிஞ்சி மலர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி இனத்தை சேர்ந்த அனைத்து மலர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இவற்றிலிருந்து பெறப்படும் தேன் அதிகளவில் மருத்துவ குணங்களை கொண்டவை என்பதால் குறிஞ்சித் தேன் என்ற சொல்லுக்கு மருத்துவ உலகில் அதிக மரியாதை உள்ளது. உலகம் முழுதும் குறிஞ்சி மலர்கள் பரவிக் கிடந்தாலும் ஆசியாவில்தான் இவற்றின் ஆதிக்கம் மிக அதிகமாகும்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 31 வகையான குறிஞ்சி இனத்தில் நீலகிரியான்தஸ் என்ற ஒரு இனம் அழிந்துவரும் தாவரங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இத்தகைய சூழலில்தான் கூடலூரில் ஜீன்பூல் பகுதியில் தற்போது பிளேகாலஸ் செசல்ஸ் என்ற வகையிலான குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

குறிஞ்சி என்ற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம். குறிஞ்சி மலர்களைக் சில இடங்களில் பார்த்துமிருக்கலாம். ஆனால் நீல மழை பொழிந்தாற்போல பரந்த வெளியில் நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் நீலக்குறிஞ்சி மலர்களை நேரில் கண்டால் மட்டுமே குறிஞ்சி மலருக்கான முக்கியத்துவம் நமக்கு தெரிவதோடு, எதிர்கால சந்ததியினருக்கு அதன் பெருமைகளும் தெரியவரும்.

Posted in Labels: , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...