இங்கு ரயில் வாடகைக்கு விடப்படும்

சென்னை: ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துச் செல்லும் புதிய முறை அமலாக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை போய் வர இந்த ரயிலை ரூ.50,000க்கு வாடகைக்கு எடுக்கலாம்.

இந்த ரயிலில் மொத்தம் 170 பேர் பயணம் செய்யலாம். ஊட்டி மலை ரயில் போக்குவரத்து 1908ம் ஆண்டு போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 6,159 அடி உயரத்தில் உள்ள இந்த மலைப் பாதையை உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் புறப்படும் இந்த ரயில் கல்லாறு, ஹில் குரோவ், குன்னூர், வெலிங்கடன், அரவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டியை சென்றடைகிறது.

46.16 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலைப் பாதையில் மொத்தம் 208 'ஹேர்பின்' வளைவுகள் உள்ளன. சிறியதும், பெரியதுமாக 250 பாலங்கள் உள்ளன. 16 குகைகள் வழியே இந்த ரயில் பயணிக்கிறது.

இந்த ரயிலல் 4 பெட்டிகளும், என்ஜினும் உள்ளன. 16 முதல் வகுப்பு இருக்கைகளும், 154 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் உண்டு.

இந்த ரயிலை மொத்தமாக வாடகைக்கு விடும் திட்டத்தை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து இதன் துணை பொது மேலாளர் (சுற்றுலா) ரவிக்குமார் கூறுகையில்,

ஊட்டி ரயிலை ரூ.25,000 செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை ஒரே நேரத்தில் 170 பேர் போகலாம். சமீபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேர் மட்டும் ரூ.25,000 செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சென்றனர். ஊட்டி போய் வருவதற்கு ரூ.50,000 வசூலிக்கிறோம்.
ஊட்டியில் ஒருமணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புவது என்றால் அதற்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஊட்டியில் மலை ரயில் நிறுத்தப்பட்டால் ஒரு பெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 வீதம் காத்திருப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.


Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...