உற்பத்தி அதிகரிப்பு !.. தடை குறைப்பு !.. கட்டணம் உயர்வு !...

நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகரித்திருப்பதால் மின் தடை நேர அளவை மின்வாரியம் குறைத்துள்ளது.

தமிழகத்தில் அனல்மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

ஏசி பயன்பாடும் அதிகரித்துள்ளதால் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. அதோடு நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 1 நாளைக்கு மூன்று மணி நேரம் மின்தடையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அரசு செயல்படுத்தி வருகிறது. இரண்டு மாதமாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நிலையில் மின்தடை அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் இன்னும் நான்கு நாளில் முடியப் போகிற நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல காற்று வீசதுவங்கியுள்ளது.

காற்று அதிகமாக வீச துவங்கியிருப்பதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நேற்று காற்றாலை மூலம் 1,800 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. இதே நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக மி்ன்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் மின்தடை நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரம்தான் நேற்று மின்தடை இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதே நிலை தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின் கட்டணம் உயர்கிறது:

இதற்கிடையே எரிவாயு விலை உயர்வு காரணமாக மத்திய அரசு வழங்கி வரும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 உயர்கிறது.

மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா ஆகியவை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவின் விலை ரூ.3,200ல் இருந்து ரூ.6,818 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. எனவே, மத்திய அரசு வழங்கும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 வரை உயர்த்தப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே கூறியுள்ளார்.

அதே போல இந்த மின் கட்டண உயர்வால் உர உற்பத்தி நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும் என்பதால், உரங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...