உலக சாம்பியன் ஆவேன் - saina nehwal
Posted On Friday, March 19, 2010 at at 12:24 AM by Twilight Sense
புதுடில்லி: உலக பாட்மின்டன் ரேங்கிங் பட்டியலில் ஐந்தாவது இடம் பெறும் முதலாவது இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனை படைத்துள்ளார் செய்னா நேவல். அடுத்து 'நம்பர்-3' இடத்துக்குள் முன்னேறுவதை இலக்காக கொண்டுள்ள இவர், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்ல காத்திருக்கிறார். அரியானாவில் பிறந்த செய்னா, பின் ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் 'செட்டில்' ஆனார். இவரது தந்தை ஹர்விர் சிங் மற்றும் தாயார் உஷா ஆகிய இருவருமே அரியானாவின் முன்னாள் பாட்மின்டன் சாம்பியன்கள். பெற்றோர் வழியில் செய்னாவும் பாட்மின்டனில் களிமிறங்கினார்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த செய்னா, பயிற்சிக்காக மாதம் தோறும் 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய முடியாமல் தவித்தார். பின் 2005ல் மிட்டல் சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவு கிடைக்க, நிதி பிரச்னை தீர்ந்தது.கடந்த 2006ல் நான்கு ஸ்டார் அந்தஸ்து பெற்ற பிலிப்பைன்ஸ் ஓபனில் பட்டம் வென்ற செய்னா, தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினார். 2008ல் உலக ஜூனியர் பாட்மின்டனில் பட்டம் வென்ற முதலாவது இந்தியர் என்ற சாதனை படைத்தார். இதே ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை நிகழ்த்தினார்.பின் 2009ல் இந்தோனேசியாவில் நடந்த சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் பட்டம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனை ஆனார்.
இந்த ஆண்டும் செய்னாவுக்கு சிறப்பாகவே அமைந்தது. சமீபத்தில் நடந்த 'ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்' தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் உலக பாட்மின்டன் ரேங்கிங் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி 5வது இடம்(58516.7646 புள்ளி) பெற்றுள்ளார். முதல் நான்கு இடங்களில் முறையே இஹான் வாங்(76811.43), வாங் லின்(66662.2), சின் வாங்(65860), ஜியாங்(59600) ஆகிய சீன வீராங்கனைகள் உள்ளனர்.ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சேட்டன் ஆனந்த் 16, காஷ்யப் 29, அரவிந்த் பட் 36, அனுப் ஸ்ரீதர் 40வது இடத்தில் உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா, திஜு ஜோடி 10வது இடம் பெற்றுள்ளது.
தங்கம் இலக்கு: தனது சாதனை குறித்து செய்னா கூறுகையில்,''ரேங்கிங் பட்டியலில் 5வது இடம் பெறுவதே எனது கனவாக இருந்தது. இது தற்போது நனவாகி இருக்கிறது. அடுத்து முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறுவதே இலக்கு. டில்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு பேட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம்,''என்றார்.