கேரள போக்கு - தமிழக அரசின் மெத்தனம்: வைகோ பாய்ச்சல்!
Posted On Tuesday, February 16, 2010 at at 10:04 AM by Muthuகோவை: தமிழகத்தின் உரிமையைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாமல், ஆடம்பர விழாக்கள், வீண் விளம்பரங்களில் அரசு கவனம் செலுத்துகிறது. வரும் முன் காக்காவிட்டால், வந்த பின்னர் கதறிப் பயனில்லை என்று தமிழக அரசை எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருந்தார்.
பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தின்போது வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், அமராவதி அணைக்கு நீர் தரும், பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா முயலுகிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் உள்ள 70 ஆயிரம் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். குடிநீர் தடைப்படும். தொழிற்சாலைகளும் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
கேரள அரசு முரண்பாடாகவே செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதை மீறி செயல்படுகிறது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு பெரும் கேடாக அமையும்.
தமிழக அரசு தமிழகத்தின் உரிமையைக் காக்கும் கடமையைச் செய்யாமல் வீண் விளம்பரங்கள், ஆடம்பர விழாக்கள் என கவனம் செலுத்தி வருகிறது. வரும் முன் காக்காவிட்டால், வந்த பின்னர் கதறிப் பயன் இல்லை.
தமிழகத்தின் எதிர்காலத்தை அடியோடு நாசம் செய்ய நினைக்கிறது கேரளா. இதைத் தடுக்க வேண்டியது தமிழகத்தின் கடமை. அதை மதிமுக செய்யும் என்றார்.
முன்னதாக கோவை வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கேரள மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல. கேரள அரசு தான் தமிழக மக்களை விரோதியாகப் பார்க்கிறது. வஞ்சித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு, அமராவதி அணை பாசன பகுதி மக்களை பாதிக்கும் வகையில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகின்றது .
கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இன்று உடுமலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
இதையும் மீறி, கேரள அரசு தனது நிலையை தொடர்ந்தால், தமிழகத்தில் இருந்து அந்த மாநிலத்துக்கு செல்லும் அனைத்து ரோடுகளை மறிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.