மியான்மரில் ஒரு புரட்சித் தலைவி

ரங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களால் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கியின் 65வது பிறந்த நாள் அவரது ஆதரவாளர்களாலும், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்டது.

மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி மக்களாட்சியை மலர செய்ய வேண்டும் என வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திய அவர் 45வது வயதில் கைது செய்யப்பட்டார்.

முதலில் சிறையிலும் பின்னர் வீட்டுக் காவலிலும் அந்த ஜனநாயகப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அவர் சிறையில் இருந்தாலும் மியான்மரில் சுதந்திரக் காற்றுக்காக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

நேற்று சூ கிக்கு 65 வயது பிறந்த நாள். இதையடுத்து அவரது ராணுவத்தினரையும் மீறி நாடு முழுவதும் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் நாடு முழுவதும் அவரது பெயரால் மரங்களையும் நட்டனர்.

சூ கிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளார். அதில், சூ கியை விடுவிக்குமாறும் மியான்மர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் அவரை விடுவிக்குமாறு மியான்மர் ராணுவ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கையி்ல் உள்ள மியான்மர் தூதரக அலுவலகம் முன்பு பிறந்த நாள் கேக்குடன் சூ கியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சூ கிக்கு 1991ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...